"ஓப்பனராக ரோஹித் சர்மா" - சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி கருத்து!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என இந்திய அந்த அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி யோசனை தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது போட்டி வரும் 14-ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இரண்டாவது போட்டியில் அவர் விளையாடி இருந்தார். பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ரோஹித் சர்மா நடுவரிசையில் விளையாடி இருந்தார். ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடி இருந்தனர்.
“தொடக்க ஆட்டக்காரராக பேட் செய்ய ரோஹித் பொருத்தமானவர். அவர் அங்கு அதிரடியாக ஆடி ரன் குவிப்பார். அதனால் அவர் அங்கு விளையாடுவது தான் சரியாக இருக்கும். மிடில் ஆர்டரில் அவரால் ரன் சேர்க்க முடியவில்லை என்பதையும் நாம் பார்த்தோம்” என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 2018-க்கு பிறகு மிடில் ஆர்டரில் ரோஹித் சர்மா பேட் செய்திருந்தார்.
“பேட்டிங் ஆர்டரில் தனது வழக்கமான இடத்தில் ஆடுவது தான் ரோஹித்துக்கு சரியாக இருக்கும். முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் இல்லாத காரணத்தால் தான் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக விளையாடினார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஜெய்ஸ்வால் உடன் 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த காரணத்தால் இந்திய அணி அந்த கூட்டணியை பிரிக்கவில்லை. இப்போது ரோஹித் வந்துவிட்டார். அதனால் ராகுல் பின்வரிசையில் ஆட வேண்டும். ரோஹித் தனது வழக்கமான இடத்தில் ஆடி, ரன் குவிப்பார் என எதிர்பார்க்கிறேன்” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.