ரோபோ சங்கர் மறைவு - உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
இதனிடையே சில நாட்களுக்கு முன் படப்பிடிப்புதளத்தில் ரத்த வாந்தி எடுத்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி - சின்னத்திரையில் சாதித்து - திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார் - நண்பர்கள் - கலையுலகினர் - ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.