ஒரே நாளில் 5 இடங்களில் அடுத்தடுத்து கொள்ளை - திருத்தணி நகராட்சியில் அதிர்ச்சி!
திருத்தணி நகராட்சியில் உள்ள 5 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி நகராட்சியில் ஒரே நாளில் ஊருக்குச் சென்ற 5 நபர்களின் வீடுகளை
உடைத்து 41 சவரன் நகை, 60 ஆயிரம் பணம், முப்பதாயிரம் ரூபாய் மதிப்புடைய
மின்சாதன பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். சம்பவ இடத்தில் டி.எஸ்.பி கந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் ராக்சி , கைரேகை நிபுணர் உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் சுந்தரமூர்த்தி தனது உறவினர் வீட்டிருக்கு சென்று உள்ளார். அச்சமயம் அவரது வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை அடித்துள்ளனர் . இதே போல் அருகில் உள்ள மங்கலகிழார் பிரதான் சாலையில் வசிக்கும் சாவித்திரி என்பவர் உறவினர் வீட்டிற்கு இரவில் சென்றுள்ளார். இன்று(டிச;31) வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டை உடைத்து 6-சவரன் நகை, 10,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அதே போல் சென்னை பூந்தமல்லியில் பார்வதி என்பவர் வீடு எடுத்து தங்கி உள்ளார். இவரது சொந்த வீடானது மங்கலகிழார் பிரதான சாலையில் உள்ளது. இந்த நிலையில் சொந்த வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அவரது வீட்டை உடைத்து 10 சவரன் நகை, 50,000 ரூபாய் பணம் திருடி சென்றனர்.
மேலும் சொக்கலிங்கம் என்பவரது புதிய வீட்டில் இருந்து ரூபாய் 30,000 மதிப்புள்ள மின்சார மோட்டார்கள் மற்றும் மின்சார ஒயர்கள் போன்றவற்றை கொள்ளை அடித்தனர். அதனை தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் தேவி என்பவர் அருகில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் இவரது வீட்டை உடைத்து கொள்ளையடித்தனர்.
ஒரேநாளில் அடுத்தடுத்த நடைபெற்ற 5 திடுட்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.