#ContainerLorryல் பணத்துடன் கொள்ளையர்கள் - துரத்தில் பிடித்த போலீஸ்... துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!
கேரளாவில் ஏடிஎம்மில் கொள்ளையடித்து விட்டு வாகன தணிக்கையில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
நாமக்கல் அருகே இன்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று தணிக்கையில் நிற்காமல் 4 இரு சக்கர வாகனங்கள், ஒரு காரை இடித்தபடி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரி அதிவேகமாக சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்றனர். பின்னர் சேலம் மாவட்டம், சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர். முதல்கட்ட தகவலின் படி கண்டெய்னர் லாரியில் கட்டு கட்டாக பணமும், சொகுசு கார் ஒன்றும் இருந்தது.
கேரளா மாநிலம் திருசூரில் ஏடிஎம்மில் இருந்து ரூ.66 லட்சம் கொள்ளையடித்து விட்டு வாகன தணிக்கையில் நிற்காமல் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினரை தொடர்ந்து சென்றதால் கண்டெய்னரில் உள்ளவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இதனைத் தொடர்ந்து போலீசார் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
அப்பகுதியைச் சுற்றி சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 7 பேர் இந்த கண்டெய்னர் லாரியில் இருந்துள்ளனர். ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட இந்த லாரியில் இருந்தவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.