#RoadAccident | சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருவேறு விபத்து | ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் காயம்!
தேசிய நெடுஞ்சாலையில், இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயமடைந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஒசூர் நோக்கி
சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர் ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த தமிழமுதன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் ஹோட்டலில் சவர்மா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிசென்ற போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதே போல் நியூடவுன் பைபாஸ் பகுதியில் சென்றுக்கொட்டிருந்த கார் முன்னாள் சென்ற மினி லாரி மீது மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்துகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் எதிர் எதிர் திசையில் செல்லும் வாகனங்கள் ஒருவழி சாலையில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதனால், உரிய பாதுகாப்புகளுடன் வாகனங்கள் செல்லும்
வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.