சாலை விபத்தில் இழப்பீடு பெறுவதற்கான காலவரையறை குறித்த வழக்கு - மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சாலை விபத்துகளில் இழப்பீடு பெறுவதற்கான காலக்கெடுவை ஆறு மாதமாக நிர்ணயித்ததற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த வழக்கறிஞர் பாக்கியரதி தாஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசின் அரசாணையின்படி, சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான இழப்பீட்டை அதிகபட்சம் ஆறு மாத காலத்திற்குள் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்ற கால வரம்பு உள்ளது.
சாலை விபத்துகளில் சிக்கி ஆயிரக்கணக்கான நபர்கள் தொடர் சிகிச்சைகளிலிருந்து வரும் நிலையில் அவர்களால் இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் உரிய இழப்பீடை கேட்டு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால் இத்தகைய காலக்கெடு நிர்ணயம் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மற்றும் தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு இன்று சுதன்ஷூ துலியா, பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.