செவி மாற்றுத்திறனுடைய மாணவரை K-Pop நட்சத்திரம் ஆக்கிய RM-ன் நன்கொடை!
RM அளித்த நன்கொடை, செவி மாற்றுத்திறன் கொண்ட மாணவரை கே-பாப் நட்சத்திரம் ஆக ஊக்கப்படுத்தியுள்ளது.
தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல இசைக்குழு BTS. ஜின், சுகா, ஜே-ஹோப், RM, ஜிமின், V, ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது பாடல்கள் தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும், ஆறுதல் தருவதாகவும் பல இளைஞர்கள் கூறுகின்றனர். தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற வேண்டும். அந்த வகையில் BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் BTS பிரபலமாவதற்கு இசை ஒருபுறம் உதவியது என்றால், அவர்கள் செய்து வரும் நன்கொடைகளும் உதவிகளும், அவர்களை பல தரப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தது. அந்த வகையில் BTS குழுவின் தலைவரும், 'Rap Monster', 'RM' என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் கிம் நம்-ஜூன், 2019 ஆம் ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு அளித்த நன்கொடை, செவி மாற்றுத்திறன் கொண்ட மாணவர் ஒருவரை கே-பாப் நட்சத்திரம் ஆக வேண்டும் என்று ஊக்கப்படுத்தியுள்ளது.PARASTAR என்டர்டெயின்மென்ட் உருவாக்கியுள்ள தென்கொரியாவின் முதல் செவி மாற்றுத்திறனுடைய உறுப்பினர்களைக் கொண்ட இசைக்குழு 'Big O!cean'. கொரிய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, மற்றும் சர்வதேச சைகை மொழி ஆகியவற்றின் உதவியுடன் பாடல்களை உருவாக்குவதன் மூலம் இசைத்துறையில் தனித்துவமான இடத்தை பிடிப்பதே இக்குழுவின் நோக்கம். இந்த குழுவில் பார்க் ஹியுன்-ஜின், லீ சான்-யோன், கிம் ஜி-சொக் ஆகிய 3 உறுப்பினர்கள் உள்ளனர்.
அண்மையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ‘Big O!cean’ குழுவின் உறுப்பினர்களிடம், எந்த கே-பாப் பிரபலத்துடன் இணைந்து பாடலை வெளியிட விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜி-சொக், தான் BTS-ன் RM உடன் இணைந்து பாடலை வெளியிட விரும்புவதாக தெரிவித்தார். மேலும், 2019-ம் ஆண்டு தான் செவி மாற்றுத் திறனுடையவர்களுக்கான சிறப்பு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, BTS-ன் RM அவரது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய பள்ளியின் இசைத்துறைக்கு நன்கொடை அளித்ததாகவும், அது தன்னை நடனம் மற்றும் இசையின் பக்கம் செல்ல ஊக்கப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.RM அளித்த நன்கொடையின் மதிப்பு அன்றைய தினத்தின் படி சுமார் 60 லட்சம் என்று கூறப்படுகிறது. RM அளித்த நன்கொடை, செவி மாற்றுத்திறன் கொண்ட மாணவரை கே-பாப் நட்சத்திரம் ஆக ஊக்கப்படுத்தியுள்ளது நெகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக BTS ரசிகர்களும், நெட்டிசன்களும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
📽️Kim Ji-seok, membro del primo gruppo K-pop ipoudente, i Big O!cean (@Big_O_cean), ha detto che grazie alla donazione fatta da #RM dei @BTS_twt alla sua scuola, ha potuto avvicinarsi al mondo della musica e diventare un idol ++pic.twitter.com/I6Q7FsLQy1
— 🇰🇷SeoulᵀᴼItaly🇮🇹 BTS ⁷ 💜 (@Seoul_ItalyBTS) April 19, 2024