இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம் : பாலஸ்தீன எழுத்தாளரின் கவிதையை பகிர்ந்த நடிகை ஆண்ட்ரியா!
கடந்த ஏப்.22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் என சந்தேகித்த இந்தியா பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.
அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து உத்தரவுகளை இந்தியா பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.
குறிப்பாக சிம்லா ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதலின் பின்னணியில், தாங்கள் இல்லை எனவும், இந்தியாவுடனான எந்த ஒரு நடுநிலை விசாரணைக்கும் தயார் எனவும், ஆனால் இந்தியா தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
இச்சூழலில் இந்தியா ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் காஷ்மீரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 அமைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தாங்கள் பாகிஸ்தான் மக்களையோ, ராணுவத்தையோ குறிவைக்கவில்லை என இந்தியா விளக்கம் அளித்திருந்தது.
ஆனால் இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவின் எல்லையோர கிராமங்களில் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தாக்குதல் தொடர்ந்தது. இதில் 13 பேர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதனைத்தொடர்ந்து இன்று நள்ளிரவு முழுவதும் இந்தியா - பாகிஸ்தான் இடையே டிரோன் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்தன.
இந்நிலையில் பூஞ்ச் தாக்குதல் தொடர்பாக நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். பாலஸ்தீன எழுத்தாளரும், கவிஞருமாக மஹ்மூத் தர்விஷின் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார். அக்கவிதை,
“போர் முடிவடையும்.
தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள்.
தாய் தனது தியாக மகனுக்காகக் காத்திருப்பாள்.
பெண் தனது அன்பான கணவருக்காகக் காத்திருப்பாள். குழந்தைகள் தங்கள் ஹீரோ தந்தைக்காகக் காத்திருப்பார்கள்.
நமது தாயகத்தை விற்றவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது, ஆனால் அதற்கு விலை கொடுத்தவர்களை நான் பார்த்தேன்” என்பதுதான்.
சியோனிச போராளிகளால் எடுக்கப்பட்ட தங்கள் தாயகத்தை இழந்த பாலஸ்தீனியர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் இந்த கவிதையை எழுதியிருப்பார்.