இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமை - #SitaramYechury-ன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 72. அவரின் மறைவிற்கு நாட்டின் முக்கிய தலைவர்களும், அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..
“இடதுசாரி இயக்கத்தின் தலைவரும், இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. சிறுவயதிலிருந்தே அச்சமற்ற தலைவராக இருந்தவர் தோழர் சீதாராம் யெச்சூரி. மாணவர் தலைவராக தைரியமாக முன் நின்று அவசரநிலைக்கு எதிராக போராடிய அவரது அர்ப்பணிப்பு முக்கியமானது.
தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், முற்போக்கு ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு, வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் ஒரு சிறந்த பாதையை வடிவமைத்தது. அவருடனான கலந்துரையாடல்களை நான் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வேன்; அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.