ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை - ஜெய்ப்பூரில் இன்று முழு அடைப்பு.!
ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுட்டுக்கொலை - ஜெய்ப்பூரில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அந்த அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ராஜஸ்தானில் வலதுசாரி அமைப்பான ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் சிலரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சுக்தேவ் சிங்கை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவரான சுக்தேவ் சிங் என்பவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் சகஜமாக சுக்தேவ் சிங்கிடம் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென சுக்தேவ் சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.
சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்களுக்கும், கொலையாளிகளுக்கும் இடையே
நடந்த மோதலில் கொலையாளிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரின் சியாம் நகர் பகுதியில் டிச. 5ம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காவல் துறையினர் தெரிவித்ததாவது..
சியாம் நகர் பகுதியில் உள்ள சுக்தேவ் சிங் வீட்டுக்கு அவரைச் சந்திக்க வேண்டும் என்று கூறி 3 பேர் வந்துள்ளனர். சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர். சுக்தேவ் சிங்குடன் சுமார் 10 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தபோது வந்திருந்த நபர்கள் திடீரென சுக்தேவ் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதில் குண்டுகள் பாய்ந்து சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுதாரித்துக் கொண்ட சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்களும் பதிலடித் தாக்குதலாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கொலையாளிகளில் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்களில் ஒருவரும் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதை அடிப்படையாக வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.
ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அங்கு வலதுசாரி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுக்தேவ் சிங்கின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரீய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.