என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் சோதனை!
சேலையூரில் உள்ள சீசிங் ராஜா வீட்டில் வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் சென்னை போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவிற்கு சொந்தமான சேலையூரில் உள்ள வீடு மற்றும் அவர் தொடர்புடைய 10 இடங்களில் வருவாய்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஆயுத தடைச் சட்டம், ஆட்களை கடத்தி தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை வாங்குவது என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
சீசிங் ராஜாவுடன் தொடர்பில் இருந்த கூட்டாளிகள் குறித்த தகவல்களை பெறுவதற்காகவும், நிலங்களை வாங்கிய ஆவணங்களை கைப்பற்றும் நோக்கத்துடன் இந்த சோதனையானது, அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.