ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கொலை - உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு!
நெல்லை டவுன் பகுதியில் நிலம் தொடர்பான பிரச்சனையால் விருப்ப ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிசிலி அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறி, தச்சநல்லூர் பால் கட்டளையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர்ஷா ஆகிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைத் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த ஜாகிர் உசேன் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜாகிர் உசேன் உறவினர்களுடன் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹடிமணி, மற்றும் துணை ஆணையர் கீதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து காவல்துறை ஆணையரோடு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் ஜாகிர் உசேன் உடல் உடற்கூறாய்வு முடிந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி டவுனில் உள்ள ஜாகிர் உசேன் இல்லத்தில் இறுதிச் சடங்கு மற்றும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.