கேரள மாநில சட்டமன்றத்தில் SIR-க்கு எதிராக தீர்மானம்.!
இந்திய தேர்தல் ஆணையமானது அண்மையில் பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இந்த திருத்தத்தின் படி அங்கு 65 லட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்த நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையமானது பீகாரை தொடர்ந்து நாடு முழுதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள தயாராக இருக்கும்படி அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதனை தொடர்ந்த 2026-ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலலை சந்திக்க உள்ள கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் முதலில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநில சட்டமன்றத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்த தீர்மானமானது எதிர்கட்சி உறுப்பினர்களின் ஒரு சில திருத்தங்கள் ஏற்றுகொள்ளப்பட்ட பின்னர் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானமானத்தில், இந்த வாக்களர் சிறப்பு தீவிர திருத்தப்பணியானது தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்தும் மறைமுக முயற்சியாகும்.
SIRக்கு நீண்ட கால தயாரிப்பு மற்றும் பரந்த ஆலோசனை தேவைப்படுகின்றன. ஆனால் தேர்தல்கள் நெருங்கி வரும் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இது அவசரமாக நிறைவேற்றப்படுகிறது. இத்தகைய அவசரம் தேர்தல் ஆணையத்தின் நோக்கங்கள் மீது சந்தேகத்தின் நிழலை ஏற்படுத்துகிறது.
தற்போதைய திருத்தம் 2002 ஆம் ஆண்டு தீவிர திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அது அறிவியல் ரீதியானது அல்ல. SIRல் 1987 க்குப் பிறகு பிறந்தவர்கள் பெற்றோரின் குடியுரிமை ஆவணங்களை வழங்குமாறு கேட்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் 2003 க்குப் பிறகு பிறந்தவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்ய இரு பெற்றோரின் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது. இத்தகைய நிபந்தனைகள், அரசியலமைப்பின் 326 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உலகளாவிய வயதுவந்தோர் உரிமையை மீறுவதாகும்.
சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் மற்றும் ஏழைகள் உள்ளிட்ட ஓரங்கட்டப்பட்ட குழுக்கள் இந்த விதிகளால் வாக்குரிமை இழக்கப்படுவதற்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தேர்தல் ஆணையம் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகி, அதற்கு பதிலாக வெளிப்படையான மற்றும் நியாயமான வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.