"போட்டித் தேர்வு எழுத வருகிற மாணவிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு தங்க விடுதி வசதி" - அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவிப்பு!
"போட்டித் தேர்வு எழுத வருகிற மாணவிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு தங்க விடுதி வசதி ஏற்பாடு செய்ய உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததையடுத்து கடந்த 20ம் தேதி சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
இந்நிலையில், சென்னை, மதுரை, கோவையில் கூடுதலாக பணிபுரியும் மகளிர் விடுதிகள் இந்தாண்டு கட்டப்பட உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது :
"இந்தாண்டு சென்னையில் புதிதாக ஒரு பணிபுரியும் மகளிருக்கான விடுதி அரசால் கட்டப்பட உள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் தேர்வு செய்து கொடுத்தால், அந்த பகுதியில் பணிபுரியும் மகளிருக்கான விடுதியை அரசு கட்டித்தரும்.
இணைய வசதி , பார்க்கிங் உட்பட அனைத்து வசதிகளுடன் கட்டப்படுகிறது. மாத வாடகையில் தங்குவோர் மட்டுமின்றி, பிற இடங்களுக்கு போட்டித் தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஓரிரு நாட்கள் வாடகைக்கு அங்கு தங்க முடியும்.மேலும், சென்னை, மதுரை, கோவையில் கூடுதலாக பணிபுரியும் மகளிர் விடுதிகள் இந்த ஆண்டு கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும்"
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.