வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள்: தொண்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வரும் நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் 3 நாள்களாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இதனால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல், சென்னை போரூர் அருகே மவுலிவாக்கம், தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், கொட்டிவாக்கம், ஓஎம்ஆர் சாலை பகுதி, அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தவித்து வருகின்றனர்.
மழை குறைந்ததை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை முதல் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர். பல்வேறு நபர்களும், தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் (HELP DESK) சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் / அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கீழ்க்காணும் அலுவலர்களின் வாட்ஸ்அப் எண்களில் தொடர்பு கொண்டு / தகவல் அனுப்பி, பதிவு செய்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அலுவலர் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் விவரம்:-
1. ஷேக் மன்சூர், உதவி ஆணையர் -9791149789
2. பாபு, உதவி ஆணையர் -9445461712
3, சுப்புராஜ், உதவி ஆணையர் - 9895440669
4. பொது - 7397766651
நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பதிவு செய்து கொள்ளும் தனிநபர்கள் / தன்னார்வலர்கள், மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.