10 நாட்களாக தொடர்ந்த மீட்பு பணி... ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு!
ராஜஸ்தானில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை, மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த டிச.23ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள கோட்புட்லியின் கிராத்புரா கிராமத்தில், சேத்னா என்ற 3 வயது சிறுமி தனது தந்தையின் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, தவறுலதாக 700 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, அழுகை சத்தம் கேட்ட குடும்பத்தினர், சிறுமி ஆழ்துளை கிணற்றில் சிக்கியதைக் கண்டனர்.
இதனையடுத்து தகவலின் அடிப்படையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக மருத்துவக் குழுவுடன் வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறுமிக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்ட இரும்பு வளையத்தை பயன்படுத்தி அவளை மேலே இழுக்கும் ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் தோண்டத் தொடங்கினர்.
ஆனால் அவர்கள் தோண்டிய சுரங்கப்பாதை தவறான திசையில் இருந்தது. இறுதியாக, மீட்புக் குழுக்களுக்கு உதவ டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் மெட்ரோவில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து 10 நாட்களாக மீட்பு பணி நடைபெற்றது. இந்நிலையில் இன்று மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இடைவிடாமல் 10 நாட்களாக போராடிய மீட்பு குழுவினருக்கு சிறுமியின் தாத்தா நன்றி தெரிவித்தார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, திறந்தவெளி ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.