மீட்புப் பணிக்காக சென்ற #IndiaCoastGaurd ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து - மாயமான 3பேரை தேடும் பணி தீவிரம்!
கப்பலில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக சென்ற கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 3பேர் மாயமாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுச் சென்றது. சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பலில் இருந்து காயமடைந்தவர்களை மீட்டு வர அனுப்பப்பட்ட ஹெலிகாப்டரில் 4பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த ஹெலிகாப்டரானது நேற்று இரவு 11 மணியளவில் அனுப்பட்டது. அவசரமாக தரையிறங்க கப்பலுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் சென்ற ஒரு விமானி உள்பட 4 பேர் கடலில் விழுந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த கடலோரக் காவல்படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹெலிகாப்டரில் சென்ற விமானி மீட்புப்படையினரால் மீட்கப்பட்டார்.
மேலும் கடலில் விழுந்த 3 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேடுதல் பணியில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய கடலோரக் காவல்படையின் மீட்புப் பணிகளுக்காக ஐசிஜி 04 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களை அனுப்பியுள்ளதாக ஐசிஜி தெரிவித்துள்ளது.