தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?
விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்ய கோரிக்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும் கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறிமாறி முன்னிலை வகித்தனர். இறுதியாக மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக தேமுதிக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதோடு தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் , இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் எந்தெந்த அரசியல் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களிலும், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர், அணைகட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 6 வாக்குச்சாவடி மையங்களிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க சார்பிலும், வேலூர் தொகுதியில் பா.ஜ.க சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.