குடியரசு தினவிழா - அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு !
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. முதலில் சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். இதையடுத்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடிக்கு மலர் தூவப்பட்டது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் படைப்பிரிவு, தமிழக காவல்துறை, சிஆர்பிஎஃப் படைப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நாட்டு நலப்பணிப்படை, சாலை பாதுகாப்புப்படை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அணிவகுப்பு நடத்தினர். இந்த நிலையில் துறை சார்ந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.
செய்தி மக்கள் தொடர்புத் துறை (மங்கல இசை), செய்தி மக்கள் தொடர்புத் துறை, காவல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளின் வடியை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை கொண்டே, பள்ளிக் கல்வித்துறை காவடியே, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சுற்றுலாத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பொதுத் (தேர்தல்கள்) துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, வனத்துறை, இந்துசமய அறநிலையத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துற, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அணிவகுப்பு பேரணி விமரிசையாக நடைபெற்றது.