குடியரசு தின விழா ஹாக்கி போட்டி- பெண்கள் பிரிவில் வேலூர் அணி, ஆண்கள் பிரிவில் ராமநாதபுரம் அணி வெற்றி!
மணப்பாறையில், 64-வது குடியரசு தின விழா ஹாக்கி போட்டிகள் கடந்த 6 நாட்களாக
நடைபெற்று வந்த நிலையில், நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெண்கள் பிரிவில் வேலூர் மாவட்ட அணியும், ஆண்கள் பிரிவில் ராமநாதபுரம் மாவட்ட அணியும் முதல் இடங்களை பிடித்தன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த
2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை பள்ளிக்கல்வித்துறை சார்பில் 64-வது குடியரசு
தின விழா மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றது. 17 வயதுக்குட்பட்ட
மாணவர், மாணவியர்களுக்கு இடையே நடைபெற்ற ஹாக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் 40 அணிகளும், ஆண்கள் பிரிவில் 38 அணிகளும் களமிறக்கப்பட்டன.
இதையும் படியுங்கள்: பெரு நாட்டின் முன்னாள் அதிபர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை!
இதில் பெண்கள் பிரிவில் வேலூர் மாவட்டம் காரணம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தையும், புதுக்கோட்டை மாவட்ட அரசு விளையாட்டு விடுதி மாணவியர் 2-வது இடத்தையும், ஈரோடு மாவட்ட அணி 3-வது இடத்தையும் பிடித்தது. அதேபோல், ஆண்கள்
பிரிவில் ராமநாதபுரம் மாவட்ட அரசு விளையாட்டு விடுதி மாணவர்கள் முதல் இடத்தையும், திண்டுக்கல் அணியினர் 2-ம் இடத்தையும், வேலூர்
அணியினர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
போட்டிகளின் நிறைவு நாளான டிச.7-ம் தேதி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த பரிசளிப்பு விழா பள்ளியில் தலைமையாசிரியை என்.கே.லதா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி வெற்றியாளர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் ஆய்வாளர்கள் சரோஜினி, நாராயணன், மணவை ஹாக்கி சங்கத் தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.