குடியரசு தினவிழா - டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு !
நாட்டின் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவையொட்டி டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
முன்னதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தொ கடமைப்பாதைக்கு வந்த போது பிரதமர் மோடி முப்படை தளபதிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். குடியரசு தினத்தையொட்டி கடமைப்பாதையில் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
விழாவில் இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் பிரமோஸ் ஏவுகணை, பினாகா மற்றும் ஆகாஷ் ராக்கெட் லாஞ்சர் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை, போர்க்கள கண்காணிப்பு அமைப்பான சஞ்சய், டிஆர்டிஓவின் தயாரிப்பான பிரலே ஏவுகணை உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் முதல் முறையாக இடம்பெற்றது.
மேலும், டி-90 பீஷ்மா டாங்கிகள், ஷார்ட் ஸ்பான் பிரிட்ஜிங் சிஸ்டம் 10மீ, நாக் ஏவுகணை அமைப்பு, மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டம் அக்னிபான் மற்றும் பஜ்ரங் ஆகியவை இடம்பெற்றது. உத்தரபிரதேசம் , குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், பீகார், கர்நாடகா, டெல்லி, ஆந்திரா, சண்டிகர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 16 அலங்கார வாகனங்களும், ஒன்றிய அமைச்சகங்கள், துறைகள் சார்பில் 15 அலங்கார வாகனங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றது.
மேலும், முப்படைகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக ‘வலிமையான, பாதுகாப்பான இந்தியா’ என்ற கருப்பொருளில் முதல் முறையாக ராணுவம், கடற்படை, விமானப்படைகள் இணைந்து தயாரித்த அலங்கார ஊர்தி இடம் பெற்றது. இறுதியாக விமானப்படையின் 40 போர் விமானங்களும், கடற்படையின் 3 போர்னியர் விமானங்களும் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள், அரசு துறை உயர் அதிகாரிகள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். குடியரசு தின விழாவையொட்டி, டெல்லி முழுவதும் 70 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள், 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 76வது குடியரசு தின விழா தேசிய கீதத்துடன் நிறைவுபெற்றது.