"நாய்களை தெருவில் இருந்து அகற்றுவது கொடூரமானது" - ராகுல் காந்தி!
டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
வழக்கின் விசாரணையில், டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் டெல்லி தெருக்களில் இருந்து நாய்களை அகற்றுவது மனிதாபிமான செயல் கிடையாது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "டெல்லியில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பல தசாப்தங்களாக மனிதாபிமான, அறிவியல் முறையுடன் உருவாக்கப்பட்ட நமது கொள்கையிலிருந்து ஒரு படி பின்வாங்குவதாகும்.
இந்த வாயற்ற ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய "பிரச்சினைகள்" அல்ல. நாய்களை கொடுமைப்படுத்தாமல் அவைகளுக்கான தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகிவற்றின் மூலம் தெருக்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
நாய்களை தெருவில் இருந்து அகற்றுவது கொடூரமானது, இரக்கமற்றது, குறுகிய பார்வை கொண்டது. பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்குகளின் நலனும் பாதுக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளார்.