"நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றம்"- காங்கிரஸ் குற்றச்சாட்டு!
நடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
எனவே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், நடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது கொடுமையான மற்றும் அவமானகரமான செயல் ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.