ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம் - மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்!
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 1966ம் ஆணடு ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேரவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் இனி அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரலாம் எனவும், அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை 58 ஆண்டுகாலமாக நீக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தடையை நீக்கியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கியதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, "1947ம் ஆண்டில் இந்த தினத்தில்தான் (ஜூலை 22) இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஆா்எஸ்எஸ், மூவா்ணக் கொடிக்கு எதிா்ப்பு தெரிவித்தது.
அதை முன்னாள் துணைப் பிரதமா் சா்தாா் வல்லபபாய் படேல் கண்டித்தாா். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு 1948, பிப்ரவரி 4ம் தேதி ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு சா்தாா் வல்லபபாய் படேல் தடை விதித்தாா். ஆா்எஸ்எஸ் பயிற்சிகளில் அரசு ஊழியா்கள் பங்கேற்க கடந்த 1966ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை 58 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் மோடி நீக்கியுள்ளாா்.
அரசியலமைப்பு மற்றும் தன்னிச்சையாக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் ஆா்எஸ்எஸ்-ஐ பாஜக எவ்வாறு பயன்படுத்தி வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது இந்த தடையை நீக்கியதன் மூலம் கொள்கைகளை அரசு ஊழியா்கள் மீது திணித்து அதிலும் அரசியல் செய்ய பிரதமா் மோடி முயற்சிக்கிறாா். இது நடுநிலையாக செயல்படும் அரசு ஊழியா்கள் மற்றும் அரசமைப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
சமூக சேவை அமைப்பாக மட்டுமே செயல்படுவோம் என வல்லபபாய் படேலுக்கு உறுதியளித்த ஆா்எஸ்எஸ் தற்போது அரசியல் ரீதியாக செயல்படுவது அவருக்கு அளித்த வாக்குறுதியை மீறி செயலாகும். நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பைப் பாதுகாக்க எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பாடுபடும்."
இவ்வாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.