BTS ஜங்கூக்கின் ‘3D’ பாடலின் ரீமிக்ஸ் - ஜஸ்டின் டிம்பர்லேக் வெர்ஷனுக்கு ரசிகர்கள் அதிருப்தி
ஜங்கூக்கின் '3D' பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனில் ஜஸ்டின் டிம்பர்லேக் ஈடுபடுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய இசைக்குழு BTS-ன் உறுப்பினர் ஜங்கூக், நவம்பர் 3-ம் தேதி தனது முதல் சோலோ ஆல்பமான 'Golden'-ஐ வெளியிட்டார். அதற்கு முன்னதாக கடந்த ஜூலை 14 ஆம் தேதி 'Seven' என்ற பாடலையும், செப்டம்பர் 29-ம் தேதி '3D' என்ற பாடலையும் வெளியிட்டார். இந்த இரண்டு பாடல்களும் ‘கோல்டன்’ ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, 3D பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக்குடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘3D’ பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் இன்று வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பு, ரசிகர்களை ஒருபுறம் மகிழ்ச்சிக்குள்ளாக்கினாலும், மற்றொரு புறம் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காரணம் ஜஸ்டின் டிம்பர்லேக்கின் சமீபகால சர்ச்சைகள். பாப் உலகில் கொடிகட்டிப் பறந்த பிரிட்னி ஸ்பியர்ஸ், 2000 முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஜஸ்டின் டிம்பர்லேக்குடன் டேட்டிங் உறவில் இருந்தார். இதனிடையே, ‘The Woman in Me’ என்ற சுயசரிதை புத்தகத்தில், ஜஸ்டின் டிம்பர்லேக்குடன் டேட்டிங் உறவில் இருந்தபோது தான் கர்ப்பம் தரித்ததாகவும், அவரின் வற்புறுத்தலால் அதனை கலைத்ததாகவும் பிரிட்னி ஸ்பியர்ஸ் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஜஸ்டின் டிம்பர்லேக்கும் பிரிட்னி ஸ்பியர்ஸிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார். இருப்பினும் ஜஸ்டின் டிம்பர்லேக் மீது கோபத்தில் இருந்த ரசிகர்கள், சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்து வந்தனர். மேலும் ஜஸ்டின் டிம்பர்லேக், தனது சுய விளம்பரத்திற்காக பிரிட்னி ஸ்பியர்ஸ் தொடர்பான வதந்திகளை பரப்பியதாகவும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதுஒருபுறம் இருக்க, கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பாராட்டி எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் ஜஸ்டின் டிம்பர்லேக்கின் கையொப்பம் இருந்ததும், ரசிகர்களை கொதித்தெழச் செய்தது. ஜஸ்டின் டிம்பர்லேக், இஸ்ரேல் ஆதரவாளர் என்று ரசிகர்களால் முத்திரை குத்தப்பட்டார்.
இதையும் படியுங்கள் : டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தமாக மூட முடிவு - ஆப்கானிஸ்தான் அறிவிப்பு..!
பிரிட்னி ஸ்பியர்ஸ், இஸ்ரேல்-பாலஸ்தீன போர் என இரண்டு விஷயங்களிலும் சர்ச்சைக்குள்ளான ஜஸ்டின் டிம்பர்லேக்கை, ஜங்கூக் உடன் இணைந்து பாடலை வெளியிட ஹைப் நிறுவனம் எப்படி ஒப்புக்கொண்டது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜங்கூக்கின் ‘3D’ பாடலின் ஜஸ்டின் டிம்பர்லேக் ரீமிக்ஸ் வெர்ஷனுக்கு ரசிகர்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.