”தமிழ்நாட்டில் மதவாதம் நுழைய முடியாது” - எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று(ஏப்.28) நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் போது, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை கார் குண்டு வெடிப்பு, ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு பற்றி பேசினார்.
இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தபோது, அந்தக் கொலை அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்தது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல் காஷ்மீரில் நிகழ்ந்தது போன்று நடக்கக்கூடாது என்று இங்கே பேசியிருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதுபோல நிச்சயமாக நடைபெறவே நடைபெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
காஷ்மிரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பேசும்போதுகூட, மத்திய அரசினுடைய பாதுகாப்பு குறைபாடு பற்றி இதுவரை நாங்கள் பேசவில்லை. நான் அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், நான் தெளிவாகக் குறிப்பிட்டது என்னவென்று கேட்டால், காஷ்மீர் தொடர்பான பிரச்சினையைப் பொறுத்தவரை மத்திய அரசு எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும், தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் சொல்லியிருக்கிறோம்.
எந்தக் காரணத்தைக்கொண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதவாதம், உள்ளே நுழைய முடியாது, முடியாது, முடியாது என்பதை நான் தெளிவோடு சொல்லிக் கொள்கிறேன். தமிழ்நாட்டை developed nation உடன் ஒப்பீடு செய்ய வேண்டுமென்று பேசினார். அதற்காக வானதி சீனிவாசனுக்கு நான் =நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பாராட்டுக்கு நன்றி. அதேநேரத்தில், நமது தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசினுடைய நிதி வராமல் இருக்கின்ற செய்தி உங்களுக்குத் தெரியும். இது developed nation அளவிற்கு ஒப்பிட வேண்டுமென்று சொன்னால், இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், தயாராக இருக்கிறோம். எனவே, நீங்கள் தயவுசெய்து உங்கள் தலைமையிடத்திலே சொல்லி, அந்த நிதியைப் பெற்றுத் தருவதற்கான குரலைக் கொடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.