தென்மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை அரசு விரைவுப் பேருந்துகளில் இலவசமாக அனுப்பலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரணப் பொருட்களை கட்டணமின்றி அனுப்பலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாகவே மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும், உணவு கிடைக்காமலும் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர்.
குறிப்பாக, நெல்லை மாநகரத்தில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம், நெல்லை ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கியமான பல இடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது.
இதையும் படியுங்கள் : முக்காணியில் வெள்ளம் - லாட்ஜில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்க கோரிக்கை..!
அதனைத் தொடர்ந்து, தாமிபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிக்கும் மேல் நீர்திறந்து விடப்பட்டிருந்ததால், ஆற்றங்கரையோரம் இருந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது மழை குறைந்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது.
இதனையடுத்து, நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிவாரணம் அளிக்க விரும்புவோர் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரணப் பொருள்களை இலவசமாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.