மிக்ஜாம் புயல், வெள்ளம் ரூ.6000 நிவாரணம் - டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!
ரூ.6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: “வெள்ள நிவாரணத்தை ரொக்கமாகவே வழங்கலாம்” – சென்னை உயர் நீதிமன்றம்
சென்னையின் பெரும்பாலன பகுதிகளில் நேற்று மாலை முதல் ரேசன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில் டோக்கன்கள் விநியோகம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் குடும்ப அட்டைகளை காட்டி டோக்கன் பெற்று வந்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நியாய விலை கடை மூலம் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன்களை பெற்று சென்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புயல் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இழப்பீடு போதாது எனவும் ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரி கொட்டும் மழையில் பேரணியாக சென்று விவசாயிகள் கோட்டாசியரிடம் மனு அளித்தனர்.