டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா!
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை தோற்கடித்த பாஜகவில் பர்வேஷ் வர்மா, வீரேந்திர சச்தேவா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாயா, அஜய் மஹாவர் ஆகியோரது பெயர்கள் முதலமைச்சர் பதவிக்கு அடிப்பட்டன. ஆனால் முதல்வர் பதவிக்கு ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமைக் கோரினார். இதைத் தொடர்ந்து இன்று ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரேகாவுக்குப் பிறகு, பிரவேஷ் வர்மாவும் பதவியேற்றார். மேலும் அமைச்சர்கள் சிலரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில துணை முதலமைச்சர் என பாஜக தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
டெல்லியில் பாஜக 27 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று 48 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சியை அமைக்கிறது. ரேகா குப்தா டெல்லியின் 4-வது பெண் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னாள் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸின் ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிஷி சிங் ஆகியோர் டெல்லியின் பெண் முதல்வர்களாக இருந்துள்ளனர்.