பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் பற்றிய பதிவு! - யூடியூபர் இர்ஃபானுக்கு சிக்கல்!
பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். குழந்தை கருவில் இருக்கும் போதே சிலர் இதன் பாலினத்தை அறிந்து, சில காரணங்களால் அந்த குழந்தையே கருவிலே அழித்து வடுகின்றனர். இதனால், குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றம் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை விதித்ததால், இர்பான் துபாய்க்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்று பாலினம் பற்றி தெரிந்து கொண்டார். அது மட்டுமல்லாமல் அதனை தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடவும் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள் : ‘இந்தியாவிலேயே கல்வித்துறையில் தலைசிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு’ – அரசு பெருமிதம்!
இதையடுத்து, இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொள்ள தடை இருக்கும் நிலையில், வெளிநாட்டில் பரிசோதனை செய்து வந்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை இதுதான் என்று அறிவித்த Youtuber இர்பான் மீது நடவடிக்கை எடுக்க எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
சுகாதாரத் துறையின் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மேலும், Youtuber இர்பான் மீது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.