#School வேலைநாட்கள் குறைப்பு... நடப்பு கல்வியாண்டில் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் வேலைநாட்கள் 220 நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வேலை நாட்களை 210ஆக குறைத்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிகளில் ஒரு கல்வியாண்டில் வழக்கமாக 210 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும். ஆனால் நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தது. வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து 10 வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலை நாட்களை குறைத்து, 210 வேலைநாட்கள் இருக்கும் வகையில் திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.