கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - கனமழையால் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை!
கேரளாவில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. கனமழையால் இன்று வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி போன்ற மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்கலைக்கழக தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை, மின்னல், பலத்த காற்று என மழை நீடிக்கும் எனவும், மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புண்டு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள கடல் பகுதியில் பேரலை எழ வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.