கூர்நோக்கு இல்லங்கள் குறித்த பரிந்துரைகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு!
தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்துவது குறித்த பரிந்துரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு வழங்கினார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்குச் சொந்தமான பேட்டரி ஒன்றைத் திருடியதாக கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட கோகுல் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தார். கூர்நோக்கு இல்ல காவலர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன்படி இதுகுறித்து ஆய்வு செய்த நீதிபதி சந்துரு தலைமையிலான குழு, அதற்கான அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து நீதிபதி சந்துரு அறிக்கையை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், ”கூர்நோக்கு இல்லங்களில் கண்காணிப்பாளர் அல்லது உதவி கண்காணிப்பாளர் முன்னிலையில் சேர்க்கை நடைபெற வேண்டும், அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் தங்குவதற்குப் போதுமான ஆடைகள் வழங்கப்பட வேண்டும், சிறிய, தீவிரமான அல்லது கொடூரமான குற்றங்களின் அடிப்படையில் சிறுவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட வேண்டும், மேலும் வயது அடிப்படையில் 13 முதல் 16 வரை ஒரு குழுவாகவும், 16 முதல் 18 வயதிற்குள் மற்றொரு குழுவாகவும் பிரிக்கப்பட வேண்டும்.” உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.