பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா அறிவிப்பு
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேர் ஹமாஸால், பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலில் இதுவரை காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் காசாவில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட ஒரு தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பை வரவேற்று பேசியுள்ள பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் வர்சென் அகாபெகியன் ஷாஹினன், “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம். இது நம்மை இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு நடவடிக்கை. இது போரை முடிவுக்குக் கொண்டுவராமல் போகலாம், ஆனால் இது ஒரு முன்னோக்கி நகர்வு” என்று தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள இந்த முடிவிற்கு இஸ்ரேல் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.