பரஸ்பர வரி விதிப்பு - அமெரிக்க அதிபர் டிரம்புடன் நெதன்யாகு திடீர் சந்திப்பு!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கைகளுக்கு உள்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவில் பொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதமும், சீன பொருட்களுக்கு கூடுதல் 34 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது. இதன்மூலம் சீன பொருட்களுக்கான வரி 54 சதவீதமாக உயர்ந்தது. இதற்கு பல்வேறு நாடுகளும், தங்கள் நாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்காக அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தன.
அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரியை அதிகரிக்க உள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்க பொருட்களுக்கான வரிவிகிதம் வரும் 10-ந்தேதி முதல் 67 சதவீதமாக உயர உள்ளது.
விரிவிதிப்புகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க பங்குச் சந்தையும் வீழ்ச்சி அடைந்தது. இதன் எதிரொலியாக நேற்று இந்திய பங்குச் சந்தையும் வீழ்ச்சியுடன் தொடங்கி வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.
இதேபோல பரஸ்பர வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவில் பொருட்களின் விலை கடுமையாக உயரக்கூடும் என்பதால் அமெரிக்கர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதன் காரணமாக டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் கூட்டணிக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துக் கொண்டனர். இச்சந்திப்பின்போது வரிவிதிப்பு குறித்து அமெரிக்காவிடம் இஸ்ரேல் பேசியதாகவும் கூறப்படுகிறது.