“மேகதாது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அணைகள் நிரம்பும்போது, கர்நாடக அரசு சார்பில் மங்கள பொருட்களுடன் ஆறுகளுக்கு சிறப்பு பூஜை செய்வது என்ற நடைமுறை மன்னர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று மாண்டயா மாவட்டத்தில் உள்ள கேஆர்எஸ் அணை நிரம்பியதைத் தொடர்ந்து கார்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவிரி ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க கர்நாடக அரசு தயாராக இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தால் அண்டை மாநிலமான அவர்களுக்கு எந்த பிரச்சனையையும் இல்லை.
மேகதாது திட்டத்தில் தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர்கள் விவாதத்திற்கு தயாராக இல்லை. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள். மத்திய அரசு அனுமதி அளித்தால் மேகதாது நீர்த்தேக்கம் கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம்.
கர்நாடக மாநில அரசின் லட்சிய திட்டமான மேகதாது திட்டத்திற்கு மத்திய அமைச்சரும், மாண்டியா எம்.பி.யுமான எச்.டி.குமாரசாமி மத்திய அரசிடம் அனுமதி வழங்க வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் அணைகள் நிரம்பும்போது கூடுதல் நீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டும்போது கடலுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கூடுதல் நீரை மேகதாதுவில் சேமித்து வைக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.