ராஷ்மிகாவின் வீடியோ விவகாரம்: மெட்டா நிறுவனத்திடம் தரவுகள் கேட்ட டெல்லி காவல்துறை!
நடிகை ராஷ்மிகாவின் ‘DeepFake’ வீடியோ விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திடம் போலி வீடியோவை பகிர்ந்தவரின் தரவுகளை டெல்லி காவல்துறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அண்மையில் இவரது முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ போலியானது என்பதை கண்டறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கண்டன குரல்களை எழுப்பினர். இதையடுத்து இந்தியாவில் DeepFake-ஐ கையாள்வதற்கான சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு தேவை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்தப் போலி வீடியோவை இணையத்தில் பகிர்ந்த மர்ம நபரின் சமூக வலைதள கணக்கின் யூஆர்எல் தரவுகளை வழங்குமாறு டெல்லி போலீஸ் மெட்டா நிறுவனத்திடம் கேட்டுள்ளது.
போலி விபரங்களைத் தயாரித்தல் (சட்டப்பிரிவு 465), நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் போலி விபரங்களைப் பகிர்தல் (சட்டப்பிரிவு 459) ஆகிய குற்றங்களின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெல்லி சிறப்பு காவல்துறை பிரிவின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 56சி மற்றும் 56இ ஆகிய பிரிவிகளின் கீழும் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: “இந்திய ரசிகர்களின் ஆதரவே எங்களை ஊக்கப்படுத்தியது” – ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நெகிழ்ச்சி
நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோ விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.