#RamMandir | 161 அடி உயர கோபுரம் கட்டும் பணி துவங்கியது!
அயோத்தி ஸ்ரீராமர் கோயிலில் 161 அடி உயர கோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டதாக, கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைய உள்ளன. இதனிடையே மக்களவை தேர்தலுக்கு முன், தரைத்தளப் பணிகள் முடிவடைந்த நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜன.22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
இதனையடுத்து நாடு முழுவதிலிருந்தும் ஏராளாமான பொதுமக்கள் தினந்தோறும் ராமர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயிலின் முக்கிய அங்கமான கோபுரம் கட்டும் பணி தொடங்கப்பட்டதாக, கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த கோபுர பணி 4 மாதங்களில் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
கோபுர கட்டுமானப் பணி தொடக்கத்துடன், ராமர் கோயில் வளாகத்தில் அமையவிருக்கும் 7 இதர கோயில்களின் கட்டுமானப் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. கோபுரம் மற்றும் 7 கோயில்களின் கட்டுமானப் பணி 4 மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணியில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிமுறைகள், தொழில்நுட்பக் குழுவை மேம்படுத்தும் நடவடிக்கை குறித்து வரும் சனிக்கிழமைவரை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது' என தெரிவித்துள்ளார்.