#Rameshwaram | பாம்பன் புதிய ரயில் பாலம் | இணைப்புப் பகுதியை தூக்கி, இறக்கும் சோதனை வெற்றி!
பாம்பன் புதிய ரயில் செங்குத்து தூக்கு பாலம் மேலே தூக்கி சோதனை செய்யப்பட்டது. சுமார் 10 மீட்டர் தூரம் பாலத்தை மேலே தூக்கியதை ஊழியர்கள் பட்டாசு வெடித்து வாண வேடிக்கையுடன் கொண்டாடினர்.
ராமேஸ்வரம் கடலில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி கடந்த 2 மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. இந்த புதிய ரயில் பாலத்தில் சரக்கு ரயில் மற்றும் என்ஜின் உள்ளிட்டவற்றை இயக்கி இந்திய ரயில்வே துறை சோதனை நடத்தி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக, சாலைப் பாலத்துக்கு இணையாக 27 மீட்டர் உயரத்திற்கு ரயில் பாலத்தை ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் தூக்கி இயக்குவதற்கு சீரான எடை தேவைப்பட்டதால் பாலத்தின் இருபுறத்திலும் உள்ள தூண்களில் இரும்பு கட்டிகள் நிரப்பும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 600 டன் எடையில் அமைக்கப்பட்ட இந்த பாலத்தில், முழுமையாக எடை சீரான பிறகு நேற்று (அக். 1) காலை ரயில்வே ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ரயில்வே முதன்மை பொறியாளர் குழு சிறப்பு பூஜை செய்து தூக்கு பலத்தை சோதனை செய்யும் பணியினை தொடங்கினர்.
முதல் கட்டமாக செங்குத்து பாலம் சுமார் இரண்டடி உயரம் தூக்கப்பட்டு பின்னர் மீண்டும் கீழே இறக்கப்பட்டது. தொடர்ந்து மாலை மீண்டும் தூக்கு பாலம் ஹைட்ராலிக் லிஃப்ட் உதவியுடன் மெல்ல மேலே தூக்கப்பட்டது. சுமார் 10 மீட்டர் தூரம் மேலே வெற்றிகரமாக தூக்கப்பட்டதையடுத்து ரயில்வே ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் வாணவேடிக்கையுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து மீண்டும் செங்குத்து பாலம் கீழே மெதுவாக இறக்கப்பட்டது.
இந்த சோதனை முடிவின் அடிப்படையில் விரைவில் பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்டு ராமேஸ்வரம் வரை ரயில் சேவை தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாம்பன் பாலம் திறக்கப்படுவதற்கான தேதி இந்த சோதனையின் முடிவின் அடிப்படையில் விரைவில் வெளியிட அதிகம் வாய்ப்பு இருப்பதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.