ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை - பொதுமக்கள் அவதி!
காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலையில் கம்புகளை வைத்து
தற்காலிக பாலம் அமைத்தும் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, சாயல்குடி போன்ற பகுதிகளில் கடந்த மூன்று
நாட்களாக பெய்த கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் கமுதி அருகே காணிக்கூர், ஒச்சத்தேவன்கோட்டை ஆகிய கிராமத்தில் 100
ஏக்கருக்கும் மேற்பட்ட மிளகாய் மற்றும் நெற்பயிர்களையும் தண்ணீர் சூழ்ந்தது.
இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் ஒச்சத்தேவன்கோட்டை, கரிசல்குளம் கடலாடி
செல்லும் சாலையை வெள்ளநீர் சூழ்ந்து அடித்து செல்லப்பட்டது. இதனால்,அப்பகுதி மக்கள் கம்பிகளை வைத்து தற்காலிக பாலம் அமைத்து ஆபத்தான முறையில் அதனை கடந்து சென்று வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : வெளியானது சலார் | எப்படி இருக்கு படம்?... ரசிகர்கள் கூறுவது என்ன?...
மேலும், கடலாடி அருகே சேரந்தை கிராமத்திலும் வெள்ள நீரில் அரிப்பு ஏற்பட்டு
சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் மறுபுறம் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட
ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெல் மிளகாய் உளுந்து போன்ற பயிர்கள்
அனைத்தும் நீரில் மூழ்கியது. பயிர்களை பார்வையிட கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் விவசாயிகள் வயல்வெளிகளுக்கு உரமூட்டை மற்றும் விவசாய இடுப்பொருளை தலையில் சுமந்து கயிறு கட்டி இடுப்பு அளவுக்கு மேல் உள்ள தண்ணீரில் இறங்கி ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர்.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதிக்கப்பட்ட கிராமங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.