ஒட்டுக்கேட்கும் கருவியை சைபர் க்ரைம் போலீசாரிடம் ஒப்படைத்தது ராமதாஸ் தரப்பு!
கடந்த ஜூலை 11 ஆம் தேதி கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் தனது இருக்கைக்கு அடியே, அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது
இதனைத் தொடர்ந்து ராமதாஸ் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றிடம் ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக தெரிவித்து இருந்தார். அவர்கள் ஒட்டு கேட்கும் கருவியை சென்னைக்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்தனர். மேலும் ஒட்டு கேட்கும் கருவி சம்பந்தமாக பாமக சார்பாக சைபர் கிரைம் போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சைபர் க்ரைம் ஏடிஎஸ்பி தினகரன் தலைமையிலான கிளியனூர் போலீசார் மற்றும் தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழு ராமதாஸ் வீட்டில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் ஒட்டு கேட்கும் கருவியை தங்களிடம் ஒப்படைத்த பிறகு மேலும் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் தனியார் துப்பறியும் நிறுவனமானது ஒட்டுக்கேட்கும் கருவியை ராமதாசிடம் ஒப்படைத்தது. இதனைத் தொடர்ந்து பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஒட்டு கேட்கும் கருவியை கோட்டகுப்பம் போலீசாரிடம் இன்று ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து மேலும் பல்வேறு கட்ட விசாரணையை சைபர் கிரைம் போலீசார் தொடங்க உள்ளனர்.