கோகினூர் வைரம் பற்றிய கதைக்களத்தில் ஹரிஹரவீரமல்லு..? - பவன்கல்யாண்!
ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சரும் , பிரபல தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் நடிக்கும் ஹரிஹரவீர மல்லு திரப்படம் நாளை வெளியாகிறது. மேலும் இந்த படம் தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதனால், கடந்த சில நாட்களாக இந்தியளவில் பல்வேறு மீடியாவினரை சந்தித்து பேசி வருகிறார்.அப்போது அவர்,
"ஹரிஹரவீரமல்லு கதை உலகப்புகழ் பெற்ற கோகினூர் வைரம் குறித்து பேசுகிறது. அந்த வைரம் விஜயவாடாவுக்கு மிக அருகில் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு கைகளுக்கு மாறியது. அதன் பின்னணியில் இந்த கதை நடக்கிறது. அந்த வைரத்தை கைப்பற்ற நினைக்க கேரக்டரில் நான் வருகிறேன். கோகினூர் வைரம் இந்தியாவின் பெருமை. இப்போது லண்டனில் இருக்கிறது..அதை நாம் மீட்க வேண்டும். நம் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் உருவாக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ”இப்படத்தில், நிதி அகர்வால், சத்யராஜ், பாபிதியோல் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.முகல் மன்னர் அவுரங்கசீப் கேரக்டரும் வருகிறது. சமீபகாலமாக மகாராஷ்டிராவில் உள்ள அவர் சமாதியை அகற்ற வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்..என்னை பொறுத்தவரையில் அது தேவையற்றது. வரலாற்றில் அக்பர்,பாபர் அளவுக்கு சத்திரபதி சிவாஜி, கிருஷ்ண தேவராயர் அளவுக்கு சொல்லப்படவில்லை. அவர்கள் சாதனைகளை தெரியப்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.