அன்புமணி மீது டெல்லி காவல்துறையில் புகாரளித்த ராமதாஸ் தரப்பு...!
பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் இருவரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையமானது, அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பாமக தலைவராக அங்கீகரித்துள்ளது.
இதையடுத்து அன்புமணி மீது டெல்லி காவல்துறையில் ராமதாஸ் சார்பாக ஜி.கே.மணி இன்று புகார் செய்துள்ளார். அதில், அன்புமணி தரப்பில், 2026 ஆம் ஆண்டு வரை பட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸே இருக்கிறார் என்று போலியான ஒரு ஆவணத்தை தயாரித்து தேர்தல் ஆணையத்தை வழங்கி இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ ஜி.கே.மணி,
”பாமக தலைவர் என்ற பதவி காலம் முடிந்த பின்பாகவும் போலியான ஒரு ஆவணத்தை தயாரித்து அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் வழங்கியிருக்கிறார். 2026 ஆம் ஆண்டு வரை பட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸே இருக்கிறார் என்று அந்த ஆவணத்தில் தயாரித்து அனுப்பி இருக்கிறார். அது தவறு எனக் கூறி ராமதாஸ் தரப்பில் பல்வேறு ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். ஆனால் அதனை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், அன்புமணிக்கு ஆதரவாக ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இது மிகப் பெரிய ஒரு மோசடி. இந்தியாவில் எந்த கட்சிக்கும் இதுபோன்று ஒரு நிலை வந்ததில்லை. தேர்தல் ஆணையமே இவ்வாறு மோசடி செய்திருந்தால் தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எப்படி நம்பிக்கை வரும் ?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சிவார்த்தையை நிறுவனர் ராமதாஸே மேற்கொள்வார். பாமக கட்சி விவகாரத்தில் தேவைப்பட்டால் சிவில் நீதிமன்றத்தை அணுகுவோம்” என்றார்.