நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை!
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இது, இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமாகும். இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். அதன்படி, கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்தனர்.
ரமலான் பண்டிகையானது, இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. இது ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 31) பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை (இன்று) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகையை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை எழும்பூர் மாநகராட்சி திடலில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் பலரும் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டனர். இதேபோல நெல்லை, கோவை என பல்வேறு இடங்களிலும் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.