தமிழ்நாட்டில் பொது இடங்களில் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியை நேரலை செய்ய அனுமதியில்லை - தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அவை வதந்தி என அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது காவல் துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை நாளை (ஜன. 22) பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். தொடர்ந்து நாளை மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு பல மாநிலங்களில் விடுமுறை அளித்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.
இதனிடையே, தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. பாஜகவை சேர்ந்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் சட்ட பிரிவு 26 ன் படிஅரசு ஆன்மிக/பூஜை விஷயங்களில் தலையிட முடியாது. எனவே இந்துக்கள் தமிழக அரசின் இந்துவிரோத ஆணையினை புறம் தள்ளி பூஜைகள், அன்னதானம் ஆகியவற்றை மேற்கொள்வோம். தடுத்தால் தடையை உடைத்து நம் மத உரிமையை, கடமையை நிலை நிறுத்துவோம். ” என தெரிவித்திருந்தார்.
அதேபோல், பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் நாளை கோயில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்கக் கூடாது என திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், 'கோயில்களுக்கு வராதீர்கள்' என இந்துக்கள் அங்குள்ள மதச்சார்பற்ற அதிகாரிகளால் விரட்டப்படுகின்றனர்.
நாளை கோயில்கள், திருமண மண்டபங்கள், பொது இடங்களில் சிறப்பு வழிபாடு, பஜனை, அன்னதானம் நடத்த திமுக அரசு தடை விதிக்கக் கூடாது. இதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை திரும்பப்பெற வேண்டும். கோயில்கள், பொது இடங்களில் நாளை சிறப்பு வழிபாடு, விழாக்கள் நடத்த அன்னதானம் வழங்க தடை இல்லை என தமிழ்நாடு அரசு வெளிப்படையாக உடனே அறிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
இதன் காரணமாகவே, தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. அப்படியான எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் பொது இடங்களில் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியை நேரலை செய்ய மட்டுமே அனுமதியில்லை எனவும் தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.