மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் - டெல்லி மகளிர் ஆணையத் தலைவரை களமிறக்கிய ஆம் ஆத்மி கட்சி.!
டெல்லியில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கு டெல்லி மாநில மகளிர் ஆணையத் தலைவரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினருமான ஸ்வாதி மாலிவால் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மாநிலத்தை சேர்ந்த மூன்று மாநிலங்களவை எம்.பி.க்களின் ஆறு ஆண்டு பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஜனவரி 19- ம் தேதி நடைபெற உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள சஞ்சய் சிங், சுஷில் குமார் குப்தா மற்றும் நரேன் தாஸ் குப்தா ஆகிய மூவரும் ஜனவரி 27ல் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் அரசியல் விவகாரக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, சஞ்சய் சிங், சுஷில் குமார் குப்தா ஆகியோர் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர். மூன்றாவது நபராக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவாலை மற்றொரு வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. சுஷில் குமார் குப்தா ஹரியாணாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதால் இந்த மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்வாதி மாலிவால் மணிப்பூர் வீடியோ விவகாரம் மற்றும் கலவரம் குறித்து மனித உரிமை ஆணையத்தின் சார்பாக மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் பாதிப்பு விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். இதேபோல பெண்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு அவ்வபோது குரல் கொடுத்ததின் மூலம் தேசிய ஊடகங்களில் கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.