For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சைதை துரைசாமிக்கு ரஜினிகாந்த் நேரில் ஆறுதல்...

05:28 PM Feb 14, 2024 IST | Web Editor
சைதை துரைசாமிக்கு ரஜினிகாந்த் நேரில் ஆறுதல்
Advertisement

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் விதார்த்தை வைத்து ‘என்றாவது ஒரு நாள்’ படத்தை இயக்கியிருந்தார். 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 40க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இமாச்சலப்பிரதேசத்தில் கஷங் நாலா என்ற பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆம் தேதி (04.02.2024) மாலை காரில் பயணம் செய்தார். அப்போது இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கிப் பலியான கார் ஓட்டுநர் டென்சிங் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் வெற்றி துரைசாமி மாயமானார். அவரைக் கண்டுபிடிக்க மத்தியப் பிரதேச போலீசார், ராணுவ வீரர்கள், ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் மூலம் தொடர்ந்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. பின்பு 8 நாட்கள் கழித்து வெற்றி துரைசாமியின் உடல் கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, அது முடிந்தவுடன் வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து நேற்று (13.02.2024) சென்னை கொண்டு வரப்பட்டது.

சென்னையில் சிஐடி நகரில் உள்ள வெற்றி துரைசாமியின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அஜித் தனது குடும்பத்தாருடன் நேரில் சென்று வெற்றி துரைசாமியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். நடிகரும் தவெக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்த வந்து, பின்பு கூட்டம் அதிகமான காரணத்தால் திரும்பி போனதாக கூறப்படுகிறது. அவரது சார்பில் அவரது கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சில நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மேலும் முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்பு தியாகராய நகரில் உள்ள மயானத்தில் வெற்றியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

அவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Advertisement