ஷாங்காய் சம்பவம் ; ”அருணாச்சலப் பிரதேசமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி”- வெளியுறவுத்துறை அமைச்சகம்
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங்ஜோம் தாங்டாக் என்பவர் லண்டனில் இருந்து ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட போது வழியில் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அப்போது அங்கிருந்த சீன குடியுரிமை அதிகாரிகள் அருணாச்சலப் பிரதேசம் சீனாவில் இருக்கும் பகுதி எனவும் அதனால் பெமா வாங்ஜோமின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனவும் கூறி அவரை கைது செய்தனர்.
மேலும் சீன அதிகாரிகள் பெமா வாங்ஜோமை ஷாங்காய் விமான நிலையத்தில் சிறைவைத்தும், கேலி செய்தும், விமான நிலையத்தின் உணவு விடுதி உள்ளிட்ட வசதிகளை மறுத்தும் துன்புறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பெமா வாங்ஜோம் ஷாங்காய் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட நிலையில் , இந்திய தூதரக அதிகாரிகள் தலையிட்டு அவரை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பெமா வாங்ஜோம் தேங்டாக், “அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்தியர்கள் வெளிநாடுகள் செல்லும்போது, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும் இச்சம்பவத்திற்கு அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் பெமா காண்டு கண்டனம் தெரிவித்தார்.
பெமா வாங்ஜோம் தேங்டாக்கின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சங்னான் (அருணாசல பிரதேசம்) சீனாவின் பிரதேசம். அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட நபரின் (பெமா வாங்ஜோமை) சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. அவர் மீது எந்த துன்புறுத்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சீனாவின் கருத்துகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீ ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியது: "அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியக் குடிமகன் ஒருவர் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருந்து, ஷாங்காய் சர்வதேச விமான நிலையம் வழியாக ஜப்பானுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை தன்னிச்சையாகக் கைது செய்தது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகளை நாங்கள் கண்டோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும், இது ஒரு வெளிப்படையான உண்மை. சீனத் தரப்பு எவ்வளவு மறுத்தாலும் இந்த மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றப்போவதில்லை.
பிரச்சினை குறித்து சீனத் தரப்பிடம் வலுவாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் பயணத்தை நிர்வகிக்கும் பல மரபுகளை மீறும் தங்கள் நடவடிக்கைகளை சீன அதிகாரிகளால் இன்னும் விளக்க முடியவில்லை. சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள், அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் 24 மணிநேரம் வரை விசா இல்லாத போக்குவரத்தை அனுமதிக்கும் அவர்களின் சொந்த விதிமுறைகளையும் மீறுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.