ராஜஸ்தான் : கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி விபத்து - 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கதுஷ்யாம்ஜி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது வேன், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்து தவுசா மாவட்ட டிஎஸ்பி ரவிபிரகாஷ் சர்மா கூறுகையில், “இந்த விபத்தில் சிக்கியவர்கள் முதலில் கதுஷ்யாம்ஜி கோயிலுக்கு சென்றுவிட்டு, பின்னர் சலசர் பாலாஜி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியது. இதில் 7 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் எட்டா பகுதியில் உள்ள அஸ்ரௌலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.