“சந்தேஷ்காலி விவகாரத்தில் ராஜாராம் மோகன் ராய் ஆத்மா வேதனை அடைந்துள்ளது!” - பிரதமர் நரேந்திர மோடி வேதனை
சந்தேஷ்காலி விவகாரத்தில் ராஜாராம் மோகன் ராய் ஆத்மா வேதனை அடைந்துள்ளது என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்தின் அரம்பாக் பகுதியில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை நாடு பார்க்கிறது. இதனால் நாடு முழுவதும் கொதிப்படைந்துள்ளது. சந்தேஷ்காலியில் நடந்த சம்பவத்தால் சமூக சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்திருக்க வேண்டும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஷாஜகான் எல்லா வரம்புகளையும் கடந்துவிட்டார். மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் இங்குள்ள பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்காக போராடினர். பாஜக தலைவர்களின் தொடர் அழுத்தத்தை அடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சந்தேஷ்காலியின் தாய்மார்களும் சகோதரிகளும் மம்தா பானர்ஜியிடம் உதவி கேட்டபோது, அவர்களுக்கு என்ன கிடைத்தது? திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரைக் காக்கவே அனைத்து நடவடிக்கைகளையும் மம்தா பானர்ஜி அரசு செய்தது.
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் ஷேக் ஷாஜகான் இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார். இதை நீங்கள் மன்னிப்பீர்களா? அம்மாக்கள் மற்றும் சகோதரிகளுக்கு நடந்ததற்கு நீங்கள் பழிவாங்க மாட்டீர்களா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
சந்தேஷ்காலி விவகாரத்தில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிரதமர் மோடி கண்டனம்:
காந்தியின் 3 குரங்குகளை போல INDIA - கூட்டணி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே உள்பட அனைவரும் இப்பிரச்னையில் வாய் திறக்காமல் உள்ளனர். காங்கிரஸிற்கு, கம்யூனிஸ்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்க தைரியம் இல்லை. அவர்கள் சந்தோஷ்காலியில் பக்கம் முகத்தை திருப்ப கூட தயாராக இல்லை என சாடினார்.